ஓட்டலில் நடிகை தங்கிய அறையில் ரகசிய கேமரா

தமிழில் ஜி.வி.பிரகாஷின் புரூஸ் லீ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கிரித்தி கர்பந்தா. தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் தான் தங்கிய ஓட்டல் அறையில் ரகசிய கேமரா வைத்து இருந்ததாக புகார் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கிரித்தி கர்பந்தா அளித்துள்ள பேட்டியில், ”நான் தங்கி இருந்த ஓட்டல் அறையில் ஒருமுறை ரகசிய கேமரா இருப்பதை கண்டுபிடித்தேன். நான் நடித்த கன்னட படத்தின் படப்பிடிப்புக்காக சென்று ஓட்டலில் தங்கியபோது இந்த சம்பவம் நடந்தது. அதை பார்த்து பயந்தேன். அதிர்ச்சியாக இருந்தது.

ஓட்டலில் வேலை செய்த ஒருவர்தான் அந்த ரகசிய கேமராவை எனது அறையில் பொருத்தி இருக்கிறார். பொதுவாக நான் தங்கும் அறையை அடிக்கடி சோதனை செய்து கொள்வது வழக்கம். அப்படி செய்தபோதுதான் எனது அறைக்குள் ரகசிய கேமரா இருப்பதை கண்டுபிடித்தேன்.

செட்டாப் பாக்ஸ் பின்புறம் யாருக்கும் தெரியாதபடி ரகசியமாக அது மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. நடிகைகளுக்கு எப்படியெல்லாம் பிரச்சினைகள் வருகின்றன என்று நினைக்கும்போது கவலையாக இருக்கிறது. இப்போது வெளியே எங்கேயாவது தங்க நேர்ந்தால் இன்னும் எச்சரிக்கையாக இருக்கிறேன்” என்றார்.