ஒரு வார பயணமாக இமயமலை செல்லும் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் ஒரு வார பயணமாக வருகிற ஆகஸ்ட் 6-ம் தேதி இமயமலைக்கு செல்ல உள்ளார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2010-ம் ஆண்டு வரை தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக இடையில் சில ஆண்டுகளாக அவர் இமயமலை செல்வதை தவிர்த்து வந்தார். பின்னர் மீண்டும் காலா, 2.0 ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்குச் சென்றார்.

அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக அவர் இமய மலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது ரஜினிகாந்த் மீண்டும் அடுத்த மாதம் இமயமலைக்கு செல்ல இருக்கிறார்.

அதன்படி, வருகிற ஆகஸ்ட் 6-ம் தேதி இமயமலை செல்லும் ரஜினிகாந்த், அங்கு ஒரு வாரம் தங்கி, பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்கு செல்ல உள்ளார். சில நேரங்களில் இமயமலை செல்லும்போது, அவரது மகள்களில் ஒருவரை உடன் அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால், இந்த முறை ரஜினிகாந்த் மட்டும் தனியாக இமயமலை செல்கிறார்.

இமயமலை பயணத்திற்கு முன்பாக ஜெய்லர் படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்து விட்டு, படக்குழுவினரிடம் தனது கருத்துகளைக் கூறிவிட்டு புறப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர்’ படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர் இமயமலையில் இருப்பார் என்றும் ரஜினிகாந்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.