ஐஆர்எஸ் அதிகாரியுடன் நெருங்கி பழகிய பிரபல நடிகை..! அம்பலப்படுத்திய அமலாக்கத்துறை

சச்சின் சாவந்துடனான எங்களின் தொடர்பு பக்கத்து வீட்டுக்காரர் என்ற அளவில் மட்டுமே இருந்தது என நடிகையின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்திய வருவாய்த்துறை அதிகாரியான சச்சின் சாவந்த், வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 46 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. 2011ல் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.1.4 லட்சமாக இருந்த நிலையில், 2022ல் ரூ.2.1 கோடியாக உயர்ந்தது. இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சச்சின் சாவந்த் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், அதிகாரி சச்சின் சாவந்த், பிரபல மலையாள நடிகை நவ்யா நாயருடன் நெருங்கி பழகியதாகவும், அவருக்கு தங்க நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை வாங்கி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளது. சச்சின் சாவந்த் சுமார் 10 முறை கொச்சிக்கு சென்று நவ்யா நாயரை சந்தித்திருப்பதையும் அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.

அமலாக்கத்துறையினர் நவ்யா நாயரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். அப்போது, சச்சின் சாவந்த் தனக்கு நண்பர் மட்டும் தான் என்றும் வேறு எந்த உறவும் தங்களுக்குள் இல்லை என்றும் நவ்யா நாயர் கூறியிருக்கிறார்.

நவ்யா நாயரின் குடும்பத்தினர் கூறும்போது, “சச்சின் சாவந்துடனான எங்களின் தொடர்பு பக்கத்து வீட்டுக்காரர் என்ற அளவில் மட்டுமே இருந்தது. நவ்யாவின் மகனுக்கு பிறந்தநாள் பரிசுகளைத் தவிர, வேறு பரிசுகள் எதுவும் அவரிடம் இருந்து பெறப்படவில்லை” என்றனர்.

எனினும், சச்சின் சாவந்த், நவ்யா நாயர் தொடர்பு மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.