எல்.ஜி.எம்
நடிகர்: ஹரிஷ் கல்யாண் ,யோகிபாபு நடிகை: இவானா,நதியா  டைரக்ஷன்: ரமேஷ் தமிழ்மணி இசை: ரமேஷ் தமிழ்மணி ஒளிப்பதிவு : விஷ்வஜித்

எல்.ஜி.எம்

ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் ஹரிஷ் கல்யாணும், இவானாவும் காதலிக்கின்றனர். வருங்கால மாமியார் நதியாவுடன் ஒரே வீட்டில் இருக்க முடியாது என்று இவானா நிபந்தனை விதிப்பதால் அவர்கள் திருமணம் தடைபடுகிறது. பிறகு மாமியாருடன் பழகி பார்த்து திருமணத்துக்கு சம்மதிக்கிறேன் என்கிறார்.

பழகுவதற்காக இருவரின் குடும்பத்தினரும் சுற்றுலா செல்கிறார்கள். இந்த பயணத்தில் வருங்கால மாமியாரை இவானா புரிந்து கொண்டாரா? திருமணம் நடந்ததா? என்பது மீதி கதை.

ஹரிஷ் கல்யாண் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வழங்கி இருக்கிறார். காதல் நிறைவேறாத கோபம், காதலி விருப்பத்தை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகள், நண்பர்களுடன் லூட்டி என பன்முக நடிப்பால் கவர்கிறார்.

இவானா காதல் காட்சிகளில் வசீகரிக்கிறார். ‘எனக்கு ஒரு யோசனை’ என அவர் விரல் நீட்டும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார்.

அழகான அம்மாவாக வரும் நதியா அபாரமான நடிப்பால் மனதில் நிற்கிறார். மகனுக்கு திருமணம் செய்து வைக்க அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்களும் ‘அடடா’ சொல்ல வைக்கிறது. கோவாவில் நதியாவை வெளிநாட்டுக்காரர் பார்த்தவுடன் காதலிப்பது ‘கலகல’.

யோகிபாபு, ஆர்.ஜே.விஜய் சிரிக்க வைக்கிறார்கள். வெங்கட் பிரபு, வினோதினி, ஸ்ரீநாத், தீபா ஆகிய அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வழங்கி உள்ளனர்.

விஷ்வஜித்தின் ஒளிப்பதிவில் கூர்க், கோவாவின் அழகு பிரகாசிக்கிறது. ரமேஷ் தமிழ்மணி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

நதியாவும், இவானாவும் பஸ்சில் முறைத்து கொள்வது, ‘பப்’பில் குடித்துவிட்டு ஆட்டம் போடுவது, புலி இருக்கும் கூண்டில் சிக்கி ‘எஸ்கேப்’ ஆவது போன்ற காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

பிற்பகுதி திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

வருங்கால கணவரின் அம்மாவுடன் பழக நினைக்கும் பெண்ணின் மனநிலையை மையமாக வைத்து வித்தியாசமான கதை களத்தில் படத்தை ரசிக்கும்படி கொடுத்து உள்ளார் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி.