எண்.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு : சினிமா விமர்சனம்
நடிகர்: சரத் நடிகை: அய்ரா  டைரக்ஷன்: ஹரி உத்ரா இசை: அலிமிர்சாக் ஒளிப்பதிவு : வினோத் ராஜா

நாயகன் சரத் மற்றும் அவரது நண்பர்கள் கால்பந்தாட்டத்தில் சாதிக்க துடிக்கிறார்கள். ஆனால் ஏழ்மையின் காரணமாக முறையான பயிற்சி எடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இளைஞர்களிடம் திறமை இருப்பதை அறிந்துகொள்ளும் முன்னாள் கால்பந்தாட்ட வீரரான மதன் அவர்களுக்கு முறையாக பயிற்சி தர முன் வருகிறார்.

அதன் பலனாக இளைஞர்கள் கால்பந்தாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதோடு முன்னணி வீரர்களாக உருவாகிறார்கள்.

இளைஞர்களின் வளர்ச்சியை பிடிக்காத வில்லன் தரப்பு அவர்களுக்கு பல தடைகளை ஏற்படுத்துகிறது.

திறமை இருந்தும் தங்களுக்கு விளையாடும் உரிமை மறுக்கப்படுவதை தெரிந்துகொள்ளும் இளைஞர்கள் அதிரடியான ஒரு முடிவை எடுக்கிறார்கள். அது என்ன? என்பது மீதி கதை.

நாயகன் சரத் முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விளையாட்டு மைதானத்தில் ஜெயிக்க வேண்டும் என்று காண்பிக்கும் உத்வேகம், தன்னுடைய லட்சியத்துக்கு எதிராக இருப்பவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் ஆவேசம் என மாறுபட்ட நடிப்பை வழங்கி கதாபாத்திரத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

நாயகி அய்ரா அழகாக இருக்கிறார். நடிப்பதற்கு வாய்ப்பு குறைவு என்றாலும் கொடுத்த வேலையில் பெயர் வாங்குகிறார்.

கால்பந்தாட்ட பயிற்சியாளராக வரும் மதன் எப்போதும்போல் தேர்ந்த நடிப்பை கொடுத்து கவனிக்க வைக்கிறார்.

நரேன், கஞ்சா கருப்பு, முத்து வீரா உட்பட ஏனைய கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

வினோத் ராஜாவின் ஒளிப்பதிவு கதையை வேகமாக நகர்த்துவதில் பெரும் பங்கு வகித்துள்ளது.

அலிமிர்சாக்கின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். பின்னணி இசையும் சிறப்பு.

விளையாட்டு உலகில் திறமையிருந்தும் பல இளைஞர்களின் லட்சியம் எப்படி அழிக்கப்படுகிறது என்பதையும், அங்கிருக்கும் நடைமுறை அரசியலையும் விறுவிறுப்பான திரைக்கதையில் சமூக நோக்கத்துடன் சொல்லி தரமான படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குனர் ஹரி உத்ரா.

நீண்ட வசனங்கள் படத்தின் பலகீனம்.