உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் காலை தொட்டு வணங்கிய நடிகர் ரஜினிகாந்த்...!

உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை அவரது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்தார்.

லக்னோ,

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் வசூல் 500 கோடி ரூபாயை நெருங்கி வருகிறது.

இதனிடையே, இமயமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலம் சென்றுள்ளார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை இன்று சந்தித்தார். நடிகர் ரஜினிகாந்த் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் வீட்டிற்கு சென்றார். வீட்டு வாசலில் காத்திருந்த யோகி ஆதித்யநாத் நடிகர் ரஜினியை வரவேற்றார். அப்போது நடிகர் ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத்தின் காலை தொட்டு வணங்கினார்.

பின்னர், ரஜினிகாந்தை முதல்-மந்திரி யோகி பூங்கொத்து கொடுத்து வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்றார். இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தும் உடன் இருந்தார்.