இஸ்ரேலில் குழந்தைகள் கண் முன்னே சகோதரி படுகொலை; இந்திய டி.வி. நடிகை வேதனை

இஸ்ரேலில் குழந்தைகள் கண் முன்னே சகோதரி, அவரது கணவர் படுகொலை செய்யப்பட்டனர் என இந்திய டி.வி. நடிகை வேதனை தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியிலும் புகுந்து அந்த பகுதி மக்களை தாக்கியது. இதில், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்து வருகிறது. காசா பகுதியில் உள்ள கட்டிடங்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல்களை நடத்துகிறது.

இந்நிலையில், இந்திய தொலைக்காட்சி நடிகை மதுரா நாயக் வெளியிட்ட செய்தியில், அவருடைய சகோதரி மற்றும் அவரது கணவர் இருவரும் அவர்களின் குழந்தைகள் கண் முன்னே படுகொலை செய்யப்பட்டனர் என வேதனை தெரிவித்து உள்ளார்.

இந்திய வம்சாவளியான யூத பெண்ணான மதுரா, நாகின் தொடரில் நடித்து வருகிறார். அவர் இன்ஸ்டாகிராமில், என்னுடைய குடும்பத்தினர் எதிர்கொண்ட வருத்தமும் மற்றும் உணர்ச்சிகளையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இஸ்ரேல் இன்று வேதனையில் உள்ளது. ஹமாஸின் கட்டுப்பாட்டின் கீழ் தெருக்களில் தீப்பற்றி எரிகின்றன என தெரிவித்து உள்ளார்.