ஆதிபுருஷ் பட வசன சர்ச்சை; நேபாள நாட்டில் இந்திய படங்களுக்கு அதிரடி தடை

ஆதிபுருஷ் படத்தின் வசன சர்ச்சையை தொடர்ந்து, நேபாள நாட்டில் இந்திய படங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

காத்மண்டு,

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் படம் உலகம் முழுவதும் கடந்த வெள்ளி கிழமை வெளியானது. ராகவனாக பிரபாசும், ஜானகியாக கீர்த்தி சனோனும் நடித்து உள்ளனர்.

எனினும், நேபாள நாட்டில் திரையிட திட்டமிடப்பட்டு இருந்த ஆதிபுருஷ் படத்தின் வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி நேபாள நாட்டின் காத்மண்டு நகர மேயர் பலேந்திர ஷா வெளியிட்ட பேஸ்புக் பதிவில், ஆதிபுருஷ் இந்திய படத்தில், ஒரு வசனம் வருகிறது.

அதில், ஜானகி இந்தியாவின் மகள் என தெரிவிக்கின்றது. இது ஆட்சேபனைக்கு உரியது. இதனை சரி செய்ய நாங்கள் 3 நாட்கள் காலஅவகாசம் அளித்து இருக்கிறோம்.

நேபாளத்தின் சுதந்திரம், சுயமரியாதையை தக்க வைத்து, தேச நலனை பாதுகாப்பது என்பது ஒவ்வோர் அரசின், அரசு அமைப்பின், அரசு சாரா பிரிவு மற்றும் நேபாள குடிமகனின் முதல் கடமை என்பதில் சந்தேகமே இல்லை என அவர் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, அனைத்து இந்திய படங்களுக்கும் அவர் தடை விதித்தும், காத்மண்டு பெருநகர போலீசாரை திரையரங்கம் முன் குவித்தும் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவை அடுத்து, பொகாரா நகர மேயரும் உத்தரவு ஒன்றை பிறப்பித்து, இன்று (திங்கட்கிழமை) காலை முதல் அனைத்து பாலிவுட் திரைப்படங்களும் திரையிட தடை விதிக்கப்படுகிறது என அறிவித்து உள்ளார்.

இரு பெருநகர மேயர்களின் உத்தரவுகளை தொடர்ந்து, திட்டமிடப்பட்ட நேரத்தில் திரையிடப்பட இருந்த இந்தி அல்லது பாலிவுட் திரைப்படங்கள் ரத்து செய்யப்பட்டன. அவற்றுக்கு பதிலாக ஹாலிவுட் மற்றும் நேபாள படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.