அவசியம் இல்லாத பட்சத்தில் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது-திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

அவசியம் இல்லாத பட்சத்தில் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

சென்னை,

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொதுச்செயலாளர் பி.என்.சுவாமிநாதன், பொருளாளர் எஸ்.பி.செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ் திரைப்பட துறை வளர்ச்சிக்காக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தயாரிப்பாளர்கள் சங்கத்துடனும், அனைத்து திரைப்பட அமைப்புகளுடனும் கலந்தாலோசித்து சில விதிகளை பின்பற்ற முடிவு எடுத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், பெப்சியும் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்திட்ட ஒப்பந்ததை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

* தமிழ் படங்களில் தமிழக கலைஞர்களையே பயன்படுத்த வேண்டும். தமிழகத்திலேயே படப்பிடிப்பை நடத்திட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஒழிய, வெளிமாநிலங்கள்-வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும்.

* இயக்குனரே எழுத்தாளராக இருந்தால், கதை உரிமையில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் அவரே பொறுப்பேற்க வேண்டும். தயாரிப்பாளர் பிரச்சினையில் பாதிக்கப்படக்கூடாது.

* குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள்ளேயே, நாட்களுக்குள்ளேயே படத்தை முடிக்க முடியாமல் போனால், அதுகுறித்த உரிய விளக்கத்தை தயாரிப்பு நிர்வாகிகள் எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும்.

மேற்கண்டவை உள்ளிட்ட புதிய விதிமுறைகள் மீறப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.