அருவா சண்ட : சினிமா விமர்சனம்
நடிகர்: ராஜா நடிகை: மாளவிகா மேனன்  டைரக்ஷன்: ஆதிராஜன் இசை: தரண் ஒளிப்பதிவு : சந்தோஷ் பாண்டி

ஆணவக் கொலையை மையமாக வைத்து வந்துள்ள படம்.

சாதி சங்க தலைவர் ஆடுகளம் நரேன். அவரது மகள் மாளவிகா மேனன். கணவனை இழந்து செங்கல் சூளையில் வேலை பார்ப்பவர் சரண்யா பொன்வண்ணன். அவரது மகன் ராஜா. மகனை கபடி விளையாட்டில் சாதிக்க வைக்க வேண்டும் என்பது சரண்யா ஆசை. தாயின் ஆசையை நிறைவேற்ற கவனம் முழுவதையும் கபடியில் செலுத்துகிறார் ராஜா.

கபடி விளையாட்டை ஆய்வு செய்து குறும்படம் எடுக்க கிராமத்துக்கு வருகிறார் மாளவிகா மேனன். அப்போது ராஜாவும், மாளவிகா மேனனும் காதல் வயப்படுகிறார்கள். சாதியை வைத்து காதலுக்கு ஆபத்து வருகிறது. ராஜா கபடி விளையாட்டில் சாதனை படைத்து அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றினாரா? வாழ்க்கையில் ஒன்று சேரவேண்டும் என்ற காதலர்களின் ஆசை நிறைவேறியதா? என்பது மீதி கதை.

கிராமத்து இளைஞன் வேடத்துக்கு சரியான பொருத்தமாக இருக்கிறார் ராஜா. கபடி விளையாட்டில் வேகம் காட்டுகிறார். குடும்ப நிலையை எண்ணி காதலை தவிர்க்கும் இடங்கள் அருமை. நாயகி மாளவிகா மேனன் புன்னகையால் வசீகரிக்கிறார். சரண்யா பொன்வண்ணன் ஏழைத் தாயாக வாழ்ந்து இருக்கிறார். கண்ணீரும் கம்பலையுமாக தள்ளு வண்டியில் மகனை சுமக்கும் காட்சி விழியில் நீர்முட்ட வைக்கிறது. கிளைமாக்சில் அவரது நடிப்பும், வசனமும் சாதி வெறியர்களுக்கு சாட்டையடி.

ஆடுகளம் நரேன், சௌந்தரராஜா ஆகியோர் வில்லத்தனங்களில் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர். கஞ்சா கருப்பு, காதல் சுகுமார் ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள். இசையமைப்பாளர் தரண் பாடல்களை தரமாக கொடுத்திருக்கிறார். பின்னணி இசையும் படத்துக்கு வலு சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பாண்டி கிராமிய வாசத்துடன் படமாக்கி இருக்கும் விதம் கண்களை கவர்கிறது. முடிவு நேர்மறையாக இருந்திருந்தால் இன்னும் பேசப்பட்டு இருக்கும். கபடி பின்னணியில் காதல், குடும்ப உறவுகள், சாதி வெறியை வைத்து சமூகத்துக்கு அவசியமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆதிராஜன். கிளைமாக்ஸ் இதுவரை சொல்லாத கருத்து.